வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திருவிக நகர் பகுதியில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா, வைகாசி விசாகம், சங்கடஹர சதுர்த்தி, உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி முருகப்பெருமானுடைய பங்குனி உத்திர பெருவிழாவான நேற்று பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்தனர்.
அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா என்று கோஷங்களை முழுங்கினர். மேலும் மதியம் 3 மணி அளவில் ஸ்ரீ செல்ல விநாயகர் ஆலயத்தில் பள்ளி தெரு சிவ. சுரேஷ், சேகர் குழுவினரால் திருவாசகம் தேவாரம் பாராயணம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்று ஊஞ்சல் சேவை நடந்தது.
பின்னர் பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை ஊஞ்சலில் தாலாட்டினர். நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் மஞ்சள் குங்குமம் மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய நிர்வாகத்தினர், இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள், ஆலய மகளிர் குழுவினர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பேரணாம்பட்டு செக்குமேடு தெருவில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலும் பக்தர்கள் பால் குடங்களை எடுத்துச் சென்று முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.