பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் 89.45 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கதை இந்திய வீரர் நீரஜ் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய வீரர் நீர்ஜ் சோப்ரா தனது முயற்சியில் எல்லைக் கோட்டை தாண்டி சென்றதால் அவருக்கு சிவப்புக் கொடி காட்டப்பட்டது.
எனினும் தனது இரண்டாவது முயற்சியில் 89.45 மீட்டர் தூரம் எறிந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
அடுத்தபடியாக இறங்கிய பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தனது முதல் முயற்சியில் எல்லைக் கோட்டை தாண்டியதாக் சிவப்புக் கொடி காட்டப்பட்டார். ஆனால் இரண்டாவது முயற்சியில் ஒலிம்பிக்கில் யாரும் இதுவரை தொடாத 92.97மீ எறிந்து சாதனை படைத்தார். இதுவரை ஈட்டி எறிதலில் அதிகபட்ச தூரம் 90.57 மீட்டர் ஆகும். தற்போது அதனை அர்ஷத் முறியடித்துள்ளார்.
இதன் மூலம் பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 88.54 மீ வீசிய கிரனேடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெண்கலம் வென்றார்.