நாகப்பாம்புகள் உட்பட 66 அபாயகரமான உயிரினங்களை கொண்டுவந்த பயணிகள்..!

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக் நகரில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்‌. அப்போது அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளில், உயிருடன் கூடிய பாம்புகள் நெளிந்து கொண்டு இருந்தன. இரண்டு பேரின் கூடைகளுக்குள், தாய்லாந்து நாட்டு வனப்பகுதியில் காணப்படும் அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள் 40, மற்றும் நாகப் பாம்புகளின் குட்டிகள் 13, அறிய வகை குரங்கு குட்டிகள் 5, அபூர்வ உயிரினங்கள் 8, மொத்தம் 66 உயிரினங்கள் மற்றும் விலங்குகள் இருந்தன.

இதை அடுத்து மத்திய வனவிலங்குகள் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விரைந்து வந்தனர். தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட உயிரினங்கள், விலங்குகளை ஆய்வு செய்தனர். இந்த விலங்குகளில், கொடிய விஷம் உடைய நாகப்பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது போன்ற விலங்குகள், உயிரினங்கள் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு அனுமதியே கிடையாது. இவைகளை இந்தியாவுக்கு அனுமதித்தால் பெருமளவு வெளிநாட்டு நோய் கிருமிகள் இந்தியாவில் உள்ள, உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் பரவி, பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று மத்திய விலங்கியல் குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறினார்கள்.

இதுவரை இல்லாத அளவு 66 அபாயகரமான பாம்புகள் உட்பட உயிரினங்களை ஒரே நேரத்தில் கடத்தி வந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.