தனியார் சொகுசு பேருந்து திடீரென்று பற்றி எரிந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து பயணிகளுடன் விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து நெல்லூர் மாவட்டத்தில் உல்வப்பாடு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தீ பற்றி எரிய துவங்கியது.
இதனை கவனித்த ஓட்டுனர் பேருந்தை நிறுத்திய நிலையில் அதில் இருந்த பயணிகள் தங்களுடைய உடமைகளை கூட எடுக்காமல் அலறி அடித்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலையில் மலமல என பரவிய தீ காரணமாக பேருந்து முழுவதும் பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.
தீயணைப்பு படையினர் வந்து சேர்வதற்கு முன்னதாக பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்பு கூடானது.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி அனைத்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து அந்த வழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்த பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.