சிவகங்கை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி மக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டத்தின் தலைநகராக இருந்தும் இவ்வழியாக செல்லும் ஒரு சில விரைவு ரயில்களை தவிர எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயில், பாண்டிச்சேரி – கன்னியாகுமரி அதி விரைவு ரயில் போன்ற பல ரயில்கள் சிவகங்கை ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. மேலும் பகல் நேரத்தில் இயக்கப்பட்ட மானாமதுரை – மன்னார்குடி ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் சிவகங்கை பகுதி வர்த்தகர்கள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பல்லவன் அதிவிரைவு ரயிலை சிவகங்கையில் இருந்து இயக்க கோரியும், சிவகங்கை அனைத்து வர்த்தக சங்கத்தினர், ரயில்வே நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தங்களது கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக வர்த்தகர்கள், அனைத்து கட்சியினர், பொதுமக்கள் இணைந்து பொது நலக்குழு என்ற அமைப்பை உருவாக்கி சிவகங்கை நகர் முழுவதும் வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியிலிருந்து சிவகங்கை வழியாக மானாமதுரை செல்லும் ரயிலின் முன் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். போராட்டத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து ரயில் மறியலில் ஈடுபட்ட 350க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

RELATED ARTICLES

Recent News