மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், உத்தப்பநாயக்கணூர், வெள்ளைமலைபட்டி, சேடபட்டி, சின்னக்கட்டளை, எழுமலை, உத்தப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.
2 மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 4 நாட்களாக மாலை நேரத்தில் பெய்யும் கனமழை காரணமாக, பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தேனி மாவட்டத்திலும் சுமார் 3 மணிநேரம் கனமழை பெய்தது. பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பெய்த மழையால், சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. தேனி பேருந்து நிலையம் குளம்போல் காட்சியளித்த காரணத்தால், வாகனங்கள் மிதந்து செல்லும் நிலை காணப்பட்டது.
பிரதான சாலையிலும் ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
கன மழை காரணமாக வைகை அணை முழு கொள்ளவான 70 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 7 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் வைகை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாப்பட்டி சுற்றுவட்டாரத்திலும் கனமழை பெய்தது. இதன்காரணமாக காரணமாக கல்லணை ஆற்றுப்பாலம், லிங்கம் கோயில் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இராமச்சந்திரபுரம் முதல் புதூர் குன்னூர் செல்லும் சாலையில், தரைப்பாலம் மூழ்கியது. இதனால், பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இப்பகுதியில் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும், விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் 2 மணிநேரம் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக, கும்பகோணம் பேருந்து நிலையம் மகாமக குளம்போல் காட்சியளித்தது. பேருந்து நிலையத்திற்கு வந்தவர்கள், முழங்கால் அளவுக்கு தேங்கியிருந்த நீரை கடந்து சென்றனர்.
இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்திலும் விடிய விடிய கன மழை கொட்டியது.இதனால் பேச்சிபாரை , பெருஞ்சானி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும், அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை பகுதியில் பெய்த மழையால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனிடையே, அடுத்த 4 நாட்கள் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.