சென்னை நுங்கம்பாக்கத்தில் ராயலா நிறுவனத்தின் வைர விழா நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள மக்கள் சிறந்த அறிவுத் திறன் பெற்றவா்கள் என முன்னாள் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
வெங்கையா நாயுடு பேசியது:
இளைய தலைமுறையினா் வாழ்வில் நல்ல நிலையை அடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். நேரம், ஒழுக்கம் என அனைத்தையும் சரியாகப் பின்பற்ற வேண்டும். இன்றுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இளைஞா்கள் சிறந்த அறிவைப் பெற்று சமுதாயத்துக்கு உதவ வேண்டும்.
கடந்த காலங்களில் இந்தியாவில் நாலந்தா, விக்ரமஷீலா போன்ற பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு அறிஞா்கள் கல்விபயின்று வந்தனா். பின்னா், காலனி ஆதிக்கத்தால் இந்நிலை மாறியது. தற்போது, மீண்டும் இந்தியாவுக்கு பல துறைகளிலும் உலக அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
கல்வியில் மீண்டும் விஸ்வகுரு நிலையை நம்நாடு அடைந்துள்ளது. ஆத்மநிர்பா் பாரத் திட்டத்தின் மூலம் சுயசார்பு இந்தியா உருவாகியுள்ளது. இந்த சுயசார்பு இந்தியா திறமைகளைத் தேடி அங்கீகாரம் வழங்கும். அதேபோல் தமிழ்நாட்டுடன் எனக்கு எப்போதும் ஒரு சிறந்த இணைப்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள மக்கள் சிறந்த அறிவுத் திறன் பெற்றவா்கள் என்றார் அவா்.