ஓசூர் மாநகராட்சி வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வதாக அதிமுக கவுன்சிலர்கள் ஆணையரிடம் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இதில் திமுக 21 கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக 16, மற்ற கட்சியினர் 8 என 45 கவுன்சிலர்கள் உள்ளனர். மாநகராட்சியாக தரம் உயர்த்திய பிறகும் அனைத்து வார்டுகளிலும் குப்பை அள்ளபடாமலும், நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளதாக ஒவ்வெரு மாநகராட்சி கூட்டங்களிலும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் அதிமுக கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்ககோரி ஆணையர் சினேகாவிடம் மனு அளித்தனர்.
அப்போது கவுன்சிலர்கள் அளித்த பேட்டியில், ஓசூர் நகராட்சியாக இருந்த போது ரூ.20 லட்சம் செலவு செய்து குப்பைகளை அகற்றி குப்பை இல்லாத நகரமாக இருந்தது. தற்போது குப்பைகளை அள்ளுவதற்கு ரூ.1 கோடி செலவு செய்கிறார்கள். ஆனால் குப்பைகள் அள்ளபடாமல் தேங்கி உள்ளது.
அதே போல் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து பலரை கடித்துள்ளது. நாய் கடித்தவர்களை கூட மாநகராட்சியிலிருந்து ஒருவர் கூட சென்று பார்க்கவில்லை. அனைத்து வார்டுகளிலும் சாலைகள் மோசமாக உள்ளது. கழிவுநீர், கால்வாய் இல்லாமல் தேங்கி உள்ளது. இது குறித்து பலமுறை மனு அளித்தும் கண்டுகொள்ளவில்லை. அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பிரச்சனைகள் உள்ளது.
அனைத்திற்கு கமிட்டி இருந்தும் செயல்பாடு இல்லை. அனைத்து வார்டுகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்க்க வேண்டும் என மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் செய்வோம். அதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக தெரிவித்தனர்.