விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றுத்திறனாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பள்ளிகுளம் பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான மணிகண்டன். முதுகலை பட்டதாரியான இவர் அதே ஊரில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான 2.8 ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டன் தனது தந்தை பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக வருவாய்த் துறையிலும்,விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்து வந்தார். ஆனால் இப்போது வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மனம் வேதனை அடைந்த மணிகண்டன் கடந்த 9-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அவர் கொண்டு வந்த பெட்ரோலை மேலே ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது தண்ணீர் ஊற்றிய ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவரின் கோரிக்கையை ஏற்ற போலிசார் அங்கிருந்து அவரை அனுப்பி வைத்தனர்.