மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பிளஸ் டூ தேர்வு தோல்வியடைந்து விடுவோம் என மன உளைச்சலில் இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடலை கைப்பற்றி டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி என் ஜி ஓ நகரை சேர்ந்த அன்னலட்சுமி என்ற மாணவி டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். சமீபத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி முடித்துள்ளார்.
இந்த நிலையில் தேர்வில் வினாக்கள் கடினமாக கேட்டதாகவும் இதனால் மதிப்பெண் குறைந்து தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என அடிக்கடி தனது பெற்றோரிடம் கூறிவந்துள்ளார். இதற்கு பெற்றோர்கள் மாணவி அன்னலட்சுமியை சமாதானம் செய்துள்ளனர்.
பெற்றோர் சமாதானத்தை ஏற்காத மன உளைச்சலில் இருந்த அன்னலட்சுமி இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மாணவி தற்கொலை சம்பவம் குறித்து டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுக்கு முன்னரே மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.