சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ.2,000 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை அதானி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, “அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவாகியுள்ள இந்தக் குற்றச்சாட்டின் மூலமாக இந்திய மற்றும் அமெரிக்க சட்டத்தை அதானி மீறியுள்ளது அம்பலமாகியுள்ளது. இருந்தும்கூட, அதானி இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறதிது.
இந்த நாட்டில் பல முதல்வர்கள் எளிதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால், ரூ.2000 கோடி ஊழல் செய்தவருக்கு பிரச்சினையே இல்லை. அவர் கைது செய்யப்பட மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனென்றால் அதானியை இந்திய பிரதமர் பாதுகாக்கிறார். மோடி – அதானி ஊழலில் கூட்டு என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை, நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.