பிரதமர் மோடி லாடக் நிலங்களை அதானி குழுமத்துக்கு வழங்கி வருகிறார்: ராகுல் காந்தி!

பிரதமர் மோடி லடாக் மக்களிடம் இருந்து நிலங்களைப் பிடுங்கி தொழிலதிபர் அதானி குழுமத்துக்கு வழங்கி வருகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினர்.

லடாக்கின் கார்கில் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

ராகுல் காந்தி பேசியதாவது: சில மாதங்களுக்கு முன்பு, நாங்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘ஒற்றுமை நடைப் பயணம்’ (பாரத ஜோடோ யாத்திரை) என்ற பெயரில் மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தோம். சிலர் இங்கு தங்கள் மனதின் உள்ள குரலைப் பேசி வரும் நிலையில் நான் மக்களின் குரலைக் கேட்கிறேன்.

இந்த பயணத்தின் நோக்கம் நாட்டில் பாஜக – ஆர்எஸ்எஸ் பரப்பி வரும் வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறைக்கு எதிராக நிற்பதே ஆகும். நாட்டு மக்களிடம் அன்பைக் காட்டுவதே எனது நடைபயணத்தின் நோக்கம்.

முன்பு நான் பயணம் மேற்கொண்டபோது என்னால் லடாக் வர முடியவில்லை. அப்போது இங்கு குளிர்காலம், பனிப்பொழிவு இருந்தது. இன்று லடாக்கின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வந்துள்ளேன். மக்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறேன்.

நாட்டின் ஓர் அங்குல நிலத்தைக் கூட யாரும் எடுக்கவில்லை, ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி சொன்னது பொய். நம் நாட்டின் நிலத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது லடாக்கில் உள்ள அனைவருக்கும் தெரியும். பிரதமர் மோடி உண்மையைச் சொல்லவில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும்.

அவர் லடாக் மக்களிடம் இருந்து நிலங்களைப் பிடுங்கி தொழிலதிபர் அதானி குழுமத்துக்கு வழங்கி வருகிறார். அவர் நாட்டை தவறாக வழிநடத்துகிறார். லடாக்கின் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சினைகள் உள்ளன. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உங்கள் முக்கியப் பிரச்சினைகளை அவையில் பேசுவேன். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

RELATED ARTICLES

Recent News