மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் பிரதமர் மோடி அதை கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து மணிப்பூர் விவகாரம் பற்றி பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை பேச வைக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.
இந்நிலையில் பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேச தொடங்கினார். அவர் பேசியதாவது ; பாஜக அரசு மீது மக்களுக்கு நாளுக்கு நாள் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. எதிர்கட்சியினருக்கு பதவி மீது தான் ஆசை. நம்பிக்கை இல்லா தீர்மானம் அரசின் பலத்தை சோதிப்பதற்காக நடைபெறவில்லை. ஊழல் செய்த கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.
2014ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்து வருகிறார்கள். அதன் பிறகு மக்கள் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு என எந்தவொரு தனித்துவம் இல்லை” என்று அவர் சாடினார்.
இந்தியாவில் பல ஊழல் வாத கட்சிகளை ஒழித்துள்ளோம். கடந்த 9 ஆண்டுகளில் ஊழலற்ற அரசை பாஜக வழங்கியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு பின் அமைந்த மெஜாரிட்டி அரசை கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சியினர் மோசமாக விமர்சித்தனர். அவர்கள் திட்டியது எனக்கு டானிக் போல இருந்தது.
பாஜகவிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்று கூட தெரியவில்லை. காங்கிரஸிடம் தெளிவான தேர்தல் வியூகம் இல்லை. தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தபோது எதிர்கட்சியினர் விமர்சனம் செய்தனர். காங்கிரஸ் கட்சிக்கு கடின உழைப்பின் மீது நம்பிக்கை இல்லை என அவர் பேசினார்.