நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணும் பணி நேற்று நடைபெற்ற நிலையில், அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த முறையும், பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “உங்களுடைய வித்தையொல்லாம் அனுப்பப்பட்டுவிட்டது. மக்களின் நம்பகத்தன்மையை நீங்கள் இழந்துவிட்டீர்கள். நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “மோடி பல்வேறு கட்சிகளை உடைத்தார். தற்போது மக்கள் அவரது மனஉறுதியை நொறுக்கியிருக்கிறார்கள். தார்மீக அடிப்படையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் சேர்ந்து, மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இண்டியா கூட்டணிக்கு நான் நிச்சயம் உதவி செய்வேன், தற்போது சிலபேரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். இண்டியா கூட்டணி மத்தியில் இருக்கவும், மோடி வெளியேறவும், நான் முயற்சி செய்வேன். இண்டியா கூட்டணி போதுமான அளவு வாக்குகளை பெற்றிருக்கிறது. எனவே, அதற்கு ஆட்சி அமைக்கும் திறன் உள்ளது” என்று கூறினார்.