போக்குவரத்து காவலரை தாக்கிய பாமக நிர்வாகி கைது

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகரை சேர்ந்தவர் பாமக நிர்வாகியான குபேந்திரன் (51). முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த இவர் தற்பொழுது பாமக மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

இவர் கனரக லாரிகளை கொண்டு தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை மணலி புதுநகர் அடுத்த ஈச்சங்குழி பகுதியில் மணலி போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த குபேந்திரன் லாரியை மடக்கி காவலர்கள் சோதனை செய்தபோது லாரிக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இது குறித்து லாரி ஓட்டுநர் அதன் உரிமையாளரான பாமக நிர்வாகிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாமக நிர்வாகி குபேந்திரன் சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்து காவலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தமது லாரிக்கு அபராதம் விதித்த போக்குவரத்து தலைமை காவலர் சரவணனை கன்னத்தில் தாக்கியும், அவரது செல்போனையும் குபேந்திரன் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக போக்குவரத்து தலைமை காவலர் சரவணன் அளித்த புகாரின் பேரில் மணலி புதுநகர் காவல் துறையினர் பாமக நிர்வாகி குபேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். போக்குவரத்து காவலரை தாக்கிய பாமக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News