இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையாற்றும் போது திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற வார்த்தையையும் தவிர்த்துவிட்டார்.
அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்மொழிந்தார். இறுதியாக அந்த தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து ஆளுநர் முதலமைச்சர் உரையின்போதே வெளியேறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆற்றிய உரையில் தமிழ்நாடு அரசு கடைபிடிக்கும் சமூகநீதிக் கொள்கை குறித்து உறுதிபட தெரிவிக்கப்பட்டிருப்பதும், போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது” என தெரிவித்தார்.
சட்டப்பேரவை மரபுகளையும், அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட ஆளுனரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை!
— Dr S RAMADOSS (@drramadoss) January 9, 2023
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், சட்டப்பேரவை மரபுகளையும் அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட ஆளுனரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை என குறிப்பிட்டுள்ளார்.