மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், ஹரே தெரு காவல்நிலையத்தில், கடந்த வியாழக் கிழமை அன்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், ஆளுநர் தனக்கு உயர் பதவிகள் கொடுப்பதாக கூறி, தன்னிடம் ஆபாசமாக நடந்துக் கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசும்போது, “ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று, சுயவிவர குறிப்புகளுடன், தன்னை சந்திக்குமாறு, ஆளுநர் என்னிடம் கூறியிருந்தார். நான், ஏப்ரல் 24-ஆம் தேதி அன்று, நண்பகல் 12.45 மணிக்கு, அவரது அலுவலகத்தில், அவரை சந்தித்தேன்.
அப்போது, ஆரம்பத்தில், சாதாரணமாக பேசிய ஆளுநர், பின்னர் என்னை ஆபாசமான முறையில் தொட்டார். அதன்பிறகு, அந்த சூழ்நிலையை சமாளித்துவிட்டு, அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.
இதையடுத்து, மே 2-ஆம் தேதி அன்று, மீண்டும் என்னை சந்திக்க வேண்டும் என்று ஆளுநர் கூறினார். இந்த முறை, சூப்பர்வைசர் ஒருவரை, என்னுடன் சேர்த்துக் கூட்டி சென்றேன். உள்ளே இருவரும் சென்ற பிறகு, என்னுடன் வந்த சூப்பர்வைசரை, ஆளுநர் வெளியே போகும்படி கூறிவிட்டார்.
அதன்பிறகு, எனக்கு பணியில் உயர் பதவிகளை கொடுப்பதாக உறுதி அளித்துவிட்டு, மீண்டும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். கடந்த வெள்ளிக் கிழமை அன்று, ராஜ்பவன் அலுவலகத்திற்கு மீண்டும் பணிக்கு வருகிறாயா? என்று என்னிடம் மீண்டும் ஆளுநர் கூறினார்.
அதற்கு, அங்கு செல்வதற்கு எனக்கு ஆசையில்லை, அந்த இடத்தில் ஆளுநர் இருக்க வேண்டும். அல்லது நான் அங்கு இருக்க வேண்டும்” என்று அந்த பெண் கூறியதாக கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் அளிக்கப்பட்டதையடுத்து, GDE என்று அழைக்கப்படும் ஆவணத்தை பதிவு செய்துள்ள காவல்துறையினர், 8 பேர் கொண்ட விசாரணை குழுவை தொடங்கியுள்ளனர். இந்த குழுவை, துணை ஆணையர் இந்திரா முகர்ஜி தான், வழிநடத்த உள்ளார்.
இந்த புகார் குறித்து பேசிய ஆளுநர், “சில அரசியல் கட்சிகளின் மூலமாக கொண்டுவரப்படும் குற்றச்சாட்டுக்களை, நான் வரவேற்கிறேன். ஒரு விஷயம் மட்டும் தெளிவாக உள்ளது. பிறர் செய்யும் ஊழலை நான் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதையும், வன்முறையை தடுப்பதையும், இப்படியான நாடகங்கள் மூலம் தடுக்கவே முடியாது” என்று கூறினார்.