சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தில்லை கங்காநகர் பகுதியை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி. 81 வயதான இவர், வீட்டில் தனியாக இருந்தபோது, கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். மேலும், வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணமும், 45 சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முதலில் சிசிடிவி கட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், அதன் பிறகு, படிப்படியாக துப்பு துலக்கி, குற்றவாளியை கைது செய்தனர்.
இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “ஒரு லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டது.. அதனால் தான் கொள்ளையடித்தேன். சாட்சிக்கு யாரும் இருக்கக் கூடாது என்பதற்காக தான், அந்த மூதாட்டியை கொலை செய்தேன்” என்று பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், “இதேபோன்று கடந்த 2021-ஆம் ஆண்டு அன்றும், வேறொரு வீட்டில் கொள்ளையடித்துள்ளேன். அப்போது அந்த வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டேன்” என்று கூறியுள்ளார். அதாவது, வீட்டில் தனியாக உள்ள மூதாட்டிகளை குறி வைத்து, கொள்ளை சம்பவத்தில் அவர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.