சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலப்பிடவூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இளங்கலை 3-ஆம் ஆண்டு படித்து வந்த இவர், நேற்று மாலை, கல்லூரியில் இருந்து வீட்டிற்கு, தனது புல்லட் பைக்கில் வந்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த 3 பேர், சாதியின் பெயரை இழிவாக சொல்லி திட்டியுள்ளனர்.
மேலும், “நீ எப்படி புல்லட் பைக்கை ஓட்டலாம்” என்று பேசிய அவர்கள், அய்யாசாமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், அவரது இரண்டு கைகளையும் வெட்டியுள்ளனர். இதில், பலத்த காயம் அடைந்த அய்யாசாமி, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே, அய்யாசாமியின் வீட்டையும், அவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில், எக்ஸ் பக்கத்தில், கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வினோத், ஆதி ஈஸ்வரன், வல்லரசு என்கிற மூன்று சமூக விரோதிகளை மட்டுமே, காவல்துறை கைது செய்துள்ளது. மீதமுள்ள சமூக விரோதிகளையும் காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, பட்டியலின சமூக மக்கள் மீது நடத்தப்படும் சாதிய தீண்டாமை சம்பவத்தைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியரிடமும், நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.