காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி. மனைவி மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மகனுடன் வசித்து வந்த இவர், யாருக்கும் தெரியாமல், வீட்டில் கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த கஞ்சா செடியை புகைப்படம் எடுத்த கண்ணுசாமியின் மகன், தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளான். இந்த புகைப்படம் வைரலான நிலையில், காவல்துறையினர் கண்ணுசாமியின் வீட்டில் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, கஞ்சா செடி இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர், இதுகுறித்து கண்ணுசாமியின் மனைவியிடம் விசாரித்துள்ளனர்.
அதற்கு, “இது புளிச்சை கீரை செடி தான்.. கஞ்சா செடி அல்ல” என்று அப்பாவித்தனமாக அவர் கூறியுள்ளார். ஆனால், அவருக்கு இது கஞ்சா செடி தான் என்பதையும், இதை வளர்ப்பது சட்டப்படி தவறு என்பதையும், காவல்துறையினர் புரிய வைத்துள்ளனர். இதையடுத்து, கண்ணுசாமியை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.