விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் விநோதினி. தமன்னா என்ற பெயரில் அழைக்கப்படும் இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது ஆண் நண்பருடன் இணைந்து கஞ்சா கடத்திய வழக்கில், கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், சிகரெட் பிடித்துக் கொண்டும், பட்டாக்கத்தியை கையில் வைத்துக் கொண்டும், வன்முறையை தூண்டும் வகையிலான பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், காவல்துறையினர் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்து, தேடி வந்தனர்.
இதனை அறிந்த அந்த பெண், “இந்த வீடியோ 2 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. நான் தற்போது திருமணம் செய்துக் கொண்டு, கணவருடன் வாழ்ந்து வருகிறேன். 6 மாதம் கர்ப்பமாகவும் உள்ளேன். என்னை தேட வேண்டாம்” என்று கூறியிருந்தார்.
இருப்பினும், அந்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண் கர்ப்பமாக இருப்பதால், மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.