காட்பாடி அருகே, மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் நகையை திருடிச் சென்ற இளைஞரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி. 70 வயதாகும் இவர், கடந்த 17-ஆம் தேதி அன்று, இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டின் பின்புறத்திற்கு இரவு சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர், மூதாட்டி அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனாட்சி, காவல்துறையில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கரன் என்ற இளைஞர், மூதாட்டியின் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.