தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று பல்வேறு பழமொழிகளில் கூறுவது வழக்கம். அந்த பழிமொழிகளுக்கு ஏற்ப, வித்தியாசமான முறையில், இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார்.
அதாவது, கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை பகுதியை சேர்ந்த இளைஞர், தனது மனைவியின் பைக்கை எடுத்துக் கொண்டு, வெளியே சென்றார். பின்னர், மீண்டும் வீட்டுக்கு வந்த அவர், தன்னுடைய பணிகளை வழக்கம் போல் பார்த்து வந்தார்.
இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு பிறகு, இளைஞருடைய மனைவியின் செல்போன் எண்ணிற்கு, மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில், ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு, அபராதம் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், தனது கணவரும், இளம்பெண் ஒருவரும், பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் சென்ற புகைப்படமும், அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அந்த இளம்பெண் குறித்து, கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, அந்த பெண் தன்னிடம் லிப்ட் கேட்டதாகவும், அதனால் அவருக்கு உதவி செய்ததாகவும, இளைஞன் கூறினார். இருப்பினும், இதனை நம்ப மறுத்த மனைவி, அவரிடம் தொடர்ந்து சண்டை போட்டுள்ளார்.
இதில், ஏற்பட்ட கைகலப்பில், கணவன் தனது மனைவியை அடித்துள்ளார். இதனால், கோபப்பட்ட அவர், காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த இளைஞரை கைது செய்தனர்.