பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் அனைத்து விதமான அம்சங்களையும் பாராட்டி வரும் ரசிகர்கள், நடிகர், நடிகைகளையும் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, வந்தியத்தேவனாக நடித்திருக்கும் நடிகர் கார்த்தியின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜ சோழனின் தளபதிகளில் ஒருவரான வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் படத்தை இயக்கிய மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸ்சாண்டர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெண்கள் பின்னால் திரியும் ஒரு காதல் மன்னன் போலப் பொய்யாகச் சித்தரித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். சோழ பேரரசில் முக்கிய அங்கம் வகித்த வந்தியத்தேவன் குறித்து தவறாகச் சித்தரித்து மக்கள் மத்தியில் தவறான எண்ண அலைகளைப் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மணிரத்னம் கொண்டு சேர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.