தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் வசந்தராஜன் போட்டியிடுகிறார். அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று போத்தனூர் அடுத்த கோணவாய்க்கால் பாளையத்தில் பிரசாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி ஏராளமான பைக் மற்றும் வாகனங்களில் ஒன்று கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர்.
இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் பாஜக வேட்பாளர் வசந்தராஜன், பாஜக நிர்வாகிகள் ஜான்சன், பிரகாஷ், முரளி, வரதராஜ், கோகுல், வெற்றிவேல், சுரேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்கள் மீது தேர்தல் விதிமுறைகளை மீறுதல், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.