சென்னை வியாசர்பாடி பி.வி காலனி 5-வது தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (24). இவர் மீது திமுக பிரமுகர் இடிமுரசு இளங்கோ கொலை வழக்கு உட்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளனர்.
மேலும், இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் கடந்த 5 வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். எனவே இவரை பிடிக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாரின் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 5.45 மணியளவில் துணை கமிஷனரின் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் அறிவழகன் இருப்பதை அறிந்து அங்கு சென்றனர்.
அப்பொழுது அறிவழகன் போலீஸ் வருவதை பார்த்து தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டுள்ளார். இதில் போலீசாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. பின்னர் தற்பாதுகாப்பிற்காக எஸ்.ஐ பிரேம்குமார் அறிவழகனை முட்டிக்கு கீழ் சுட்டுள்ளார். இதில் அறிவழகனுக்கு வலது முழங்காலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேலே கீழே விழுந்தார்.
இதனையடுத்து போலீசார் அங்கு சென்று அறிவழகனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அறிவழகன் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் ஒரு பட்டாகத்தி ஆறு கிலோ கஞ்சா உள்ளிட்டவை போலீசார் பறிமுதல் செய்தனர்.