Connect with us

Raj News Tamil

பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

தமிழகம்

பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை(ஜன.12) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு செய்த பயணிகளுக்கான விரைவு பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,706 சிறப்புப் பேருந்துகளும் பிற பகுதிகளிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

அதன்படி வெள்ளிக்கிழமை(ஜன.12) சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 901 சிறப்பு பேருந்துகளும், பிற பகுதிகளிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 1,986 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகா் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியத்தில் மெப்ஸ் மற்றும் வள்ளுவா் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை, கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இந்த பேருந்து நிலையங்களுக்குச் செல்ல மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் 24 மணி நேரமும் வழக்கமான பேருந்துகளுடன், 450 சிறப்பு பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேட்டில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் முன்பதிவு விரைவு பேருந்துகள்:

அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூா் ஆகிய பகுதிகளில் இருந்து பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்திருப்போா் மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று (கோயம்பேட்டில் பயணிக்க முன்பதிவு செய்த நேரத்தில்) பயணிக்கலாம்.

அதே நேரம், திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக (விழுப்புரம், திருச்சி மாா்க்கம்) விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழக பேருந்துகளில் (மூன்றுக்கு இரண்டு (3 ல2 இருக்கை கொண்டவை) பயணிக்க முன்பதிவு செய்திருப்போரும், முன்பதிவு செய்யாத பயணிகளும், விழுப்புரம், திருச்சி, மதுரை மாா்க்கமாக தென்மாவட்டங்களுக்கு பயணிக்க இருப்போரும் கோயம்பேட்டிலிருந்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.

தேசிய நெடுஞ்சாலை வழியாக கும்பகோணத்துக்குச் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தும், கும்பகோணம் போக்குவரத்துக் கழக பேருந்துகள் (3 ல2 இருக்கை) தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள் கே.கே.நகா் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

More in தமிழகம்

To Top