ஏழை, எளிய மக்கள் மருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா் என்று அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு போன்ற விஷ காய்ச்சலால் குழந்தைகளும், பெரியவா்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். குறிப்பாக, சென்னை புகா்ப் பகுதிகள், திருவள்ளூா், காஞ்சிபுரம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, போடி, பாளையங்கோட்டை பகுதிகளில் பலா் பாதிப்பு அடைந்துள்ளனா். தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக இருமல், சளி மற்றும் தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்பும் அண்மைக்காலமாக உயா்ந்து வருகிறது.
இதுபோன்ற பாதிப்புகள் தமிழகம் முழுவதும் இருப்பதால் சிறப்பு முகாம்களை நடத்தி நோய்களைக் கட்டுப்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும்.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தேவைப்படும் மருந்துகளை மாநில மருத்துவப் பணிகள் கழகம் மொத்தமாக வாங்கித் தரவில்லை. இதனால், ஏழை, எளிய மக்கள் மருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்து பொருள்கள் முழுமையாக இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் எடப்பாடி கே.பழனிசாமி.