கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கட்சி, நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. இதில், விருதுநகர் தொகுதியில், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டார்.
இந்த தொகுதியில் இவர் வெல்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது என்றும், அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்தனர். அதற்கு ஏற்றார்போல், ஆரம்பத்தில் இருந்து முன்னிலை வகித்த விஜயபிரபாகரன், இறுதியில் 4 ஆயிரத்து 839 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இது, தேமுதிக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தேமுதிகவின் பொதுச் செயலாளரும், விஜய பிரபாகரனின் தாயுமான பிரேமலதா, தற்போது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-
“தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றுவிட்டது என்று முதலமைச்சர் கூறினார். ஆனால், அந்த சமயத்தில், 4 தொகுதிகளில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்துக் கொண்டு தான் இருந்தது.
அப்படி இருக்கும்போது, எதன் அடிப்படையில், முதலமைச்சர் இவ்வாறு கூறினார் என்பதை, விளக்க வேண்டும்.
விருதுநகர் தொகுதியை பொறுத்தவரை, நள்ளிரவு வரை, வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. நள்ளிரவு ஒரு மணிவாக்கிலே தான், வெற்றி சான்றிதழை திமுகவின் வேட்பாளர் பெற்றார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்கிறது என்று எங்களது முகவரும், அதிமுகவின் வழக்கறிஞர்களும் முறையிட்டனர். ஆனால், மிரட்டும் தோனியில் காவல்துறையினரை இறக்கி, நியாயத்திற்கு செவி சாய்க்காமல், வாக்கு எண்ணிக்கையை அவர்கள் தொடர்ந்து நடத்தினார்கள்” என்று கூறினார்.
“பொதுவாக, தபால் ஓட்டுக்களை, காலையிலேயே எண்ணிவிடுவார்கள். ஆனால், விருதுநகர் தொகுதியில் மட்டும்தான், நள்ளிரவு வரை, தபால் வாக்குகள் எண்ணாமல் இருந்தனர். இதனை வைத்து பார்க்கும்போது, நிச்சயம் சூழ்ச்சி செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
எனவே, இமெயில் மூலமாகவும், தபால் மூலமாகவும், தேர்தல் ஆணையத்திடம், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரியிருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
இறுதியாக, “விஜய பிரபாகரன் தோற்கவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார்” என்று பிரேமலதா பேசி முடித்தார்.