பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் மோடி நேற்று இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கினார்.
இந்நிலையில், பயணத்தின் 2வது நாளான இன்று பிரதமர் மோடி திருச்சி சென்றார். அங்கிருந்து திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றார். திருச்சி விமான நிலையத்திலிருந்து கோயிலுக்குச் செல்லும் வழி நெடுகிலும் பிரதமரை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்துக்கிடந்தனர்.
அவர்களை பார்ப்பதற்கு, காரின் கதவை திறந்து நின்றபடி பிரதமர் மோடி கையசைத்து சென்றார். பிரதமரின் வருகையையொட்டி கோயிலில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.