இந்தியாவின் மிக நீண்ட கடல் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்!

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரிடப்பட்ட ‘அடல் சேது’ என்ற கடல் பாலமும் கட்டப்பட்டு வந்தது. மும்பையில் உள்ள தீவு நகரான சேவரியில் இருந்து ராய்காட் மாவட்டம், உரான் தாலுகாவில் உள்ள நவா சேவாவில் இந்தபாலம் முடிவடைகிறது.

இந்த திட்டம் ரூ. 18 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 22 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் ஆறு வழித்தடங்கள் உள்ளது. இந்தியாவிலே மிக நீளமான கடல் பாலம் இதுவேயாகும். உலக அளவில் 7-வது நீளமான பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

இவ்வளவு சிறப்பு மிக்க இந்தியாவின் மிக நீளமான ‘அடல் சேது’ கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இந்நிலையில், ‘அடல் சேது’ பாலத்தில் பயணம் செய்வதற்கான சில விதிகளை மும்பை காவல் துறை வெளியிட்டுள்ளது.

அதாவது, நான்கு சக்கர வாகனங்களுக்கான அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ. ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்சாக்கள், டிராக்டர்கள் இந்த கடல் பாலத்தில் செல்ல அனுமதியில்லை.

கார்கள், டாக்சிகள், இலகு ரக மோட்டார் வாகனங்கள், மினி பஸ்கள் மற்றும் இரு அச்சு பேருந்துகள் போன்ற வாகனங்கள் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம். மேலும், பாலத்திலிருந்து ஏறுதல் மற்றும் இறங்குவதற்கான வேக வரம்பு மணிக்கு 40 கி. மீ. நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு மும்பை – நவி மும்பை இடையேயான 2 மணிநேர பயணம் வெறும் 20 நிமிடங்களாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News