நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் இந்துக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும். நமது வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உள்ளது என காங்கிரஸ் கூறி வருகிறது. அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்கு நாட்டின் செல்வத்தை காங்கிரஸ் பகிர்ந்தளிக்கும் என்றார்.
காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சு ‘மத வெறுப்பு பேச்சு’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டித் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.