Connect with us

Raj News Tamil

பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகம்

பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி மடல் எழுதியுள்ளார்.

அதில், “முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் உங்களின் ஒருவனான நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது. நாளெல்லாம் திட்டங்கள்; பொழுதெல்லாம் சாதனைகள்; அதனால் பயன்பெறும் மக்களின் வாழ்த்துகள் என அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்போரும், மனச்சாட்சி விழிக்கும்போது மனதுக்குள் பாராட்டும் வகையிலான நல்லாட்சியை வழங்கி வருகிறோம். இத்தகைய திராவிட மாடல் ஆட்சியானது இன்று இந்தியா முழுவதும் கவனிக்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் மாபெரும் ஜனநாயகக் கடமை ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்திட நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மிகமிக முக்கியமானதாகும். பாசிசத்தை வீழ்த்திட, மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட மாநில உரிமைகளை மீட்டிட, ‘இண்டியா’ கூட்டணி வென்றிட வேண்டும். இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்கும் ஜனநாயகக் போர்க்களத்துக்கு நாம் தயாராக வேண்டும்.

தமிழகத்துக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது. திமுகவைப் பற்றியும், திமுக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர். அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.

எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டித் திறப்பதற்குத் தடையாக இருந்தோமா? மெட்ரோ ரயில் திட்டங்களுக்குத் தடையாக இருந்தோமா? மத்திய அரசின் எந்தத் திட்டங்களுக்கு நிலம் ஒதுக்காமல் இருந்தோம் என்பதைச் சொல்லட்டும். பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுகிறார் பிரதமர்.

நீட் தேர்வை எதிர்க்கிறோம். ஏழை மக்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கும் பலிபீடம் அது. அதனால் அதை எதிர்க்கத்தான் செய்வோம். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்விச் சாலையில் தடைக்கல் எழுப்புகிறார்கள். அதை எதிர்க்கத்தான் செய்வோம். மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்தோம். உழவர்களை, நிலத்தில் இருந்து விரட்டுவது அது. குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மையினர்க்கும் இலங்கைத் தமிழர்க்கும் எதிரானது. எதிர்க்கிறோம். எதை எதிர்க்கிறோமோ, அதை வெளிப்படையாகச் சொல்லி விட்டுத்தான் எதிர்க்கிறோம். ஆனால், ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடிக்கு திமுகவைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.

திமுகவை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர். திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. அவரது பாணியில் பாஜகவே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களைத் தலைவர் கருணாநிதி அப்படி வளர்க்கவில்லை. ஜனநாயகக் களத்தில் நின்று ஒரு கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படும் உரிமை பாஜகவுக்கு உண்டு. கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பாஜக, வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன்.

பாஜக அரசின் வஞ்சகச் செயல்களைப் பட்டியலிட்டு மக்களிடம் பரப்புங்கள். மக்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்களுக்கு நினைவூட்டும் கடமைதான் நமக்கு உண்டு. புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் நாற்பதும் நமதே என்று சொல்லத்தக்க வகையில் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் ‘இண்டியா’ கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாகத் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ‘இண்டியா’ கூட்டணி கட்சிகளை பாஜக தொல்லை செய்து வருவதைப் பார்க்கும்போது நம்முடைய அணியின் வெற்றி அகில இந்தியா முழுமைக்கும் உறுதியானதாகவே உணர முடிகிறது.

‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ ஒலித்திடும் வகையில் களப்பணிகள் வீடு வீடாகத் தொடரட்டும். ‘நாற்பதும் நமதே – நாடும் நமதே’ என்கிற இலக்கினை அடைந்திடும் வகையில் திமுக தொண்டர்களின் உழைப்பு அமையட்டும். அது இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கட்டும். அதுதான் உடன்பிறப்புகளாகிய நீங்கள் உங்களில் ஒருவனான எனக்கு வழங்கிடும் இனிய பிறந்தநாள் பரிசாகும்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top