சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள், தங்களது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், ‘சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கான கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் காணொலி வசதியும் ஏற்படுத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சிறைகள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளி, பெண்கள் தனிச் சிறைகள் என 54 இடங்களில் 1.58 லட்சம் ரூபாய் செலவில் தொலைபேசி மையங்கள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கைதிகள் தங்களது குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசுவதற்காக சிறைகளுக்கு 58 ஆன்டிராய்டு செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.