மேட்டுப்பாளையம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இருந்து சாலையூர், கெண்டேபாளையம், தேக்கம்பட்டி வழியாக பெரியபுத்தூர் வரை தனியார் பேருந்து ஒன்று இயங்கி வருகிறது. இந்த பேருந்தின் டிரைவராக மனோஜ்குமார்(24) என்பவரும், கண்டக்டராக மணிகண்டன்(25) என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பேருந்தை மனோஜ்குமார் ஓட்டிக்கொண்டு இருந்துள்ளார்.பேருந்தில் 6 பயணிகளும் இருந்துள்ளனர். அப்போது,காரமடை அடுத்துள்ள கெண்டேபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே இளைஞர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளனர். அப்போது,இருசக்கர வாகனத்தை எடுக்குமாறு கூறவே பேருந்தின் டிரைவருக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இளைஞர்கள் பேருந்தின் மீது சாலையில் கிடந்த கல்லை எடுத்து வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர். மேலும்,டிரைவரான மனோஜ்குமாரின் மண்டையும் உடைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து அறிந்த காரமடை உதவி ஆய்வாளர் சுல்தான் இப்ராஹீம்,பயிற்சி உதவி ஆய்வாளர் தியாகராஜு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காரமடை போலீசார் கெண்டேபாளையம் பகுதியை சேர்ந்த ரகுராம்(21), கௌதம்(20), சுதாகர்(24), கவிமணி என்ற பகவதி(21), சுதி ஆனந்த்(22), புங்கம்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்த நவீன்குமார்(19) உள்ளிட்ட ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர்,ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.