தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் இன்று இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு மேலாக தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்டோர் அந்தந்த தொகுதிகளை சார்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
காலை 6 மணி முதல் ஒவ்வொரு ஊரில் இருந்தும் தொகுதி சார்பில் வாகனங்கள் மூலம் மாணவர்களும் பெற்றோர்களும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்துள்ள மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என 5 ஆயிரம் பேருக்கும் காலை உணவு மற்றும் மதிய உணவாக பிரியாணியும் வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக பொது வெளியில் பேனர், கட் அவுட்டுகள் வைக்கக் கூடாது என ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ஏற்கனவே நடிகர் விஜய் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது, அது போல் பெரிய பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை, சில இடங்களில் போஸ்டர்கள் மட்டும் ஒட்டப்பட்டுள்ளது.