புதுச்சேரியில் மதுபான கடையை மூட கோரி கருப்புகொடி ஏந்தி போராட்டம்

புதுச்சேரியில் ஆளும் அரசானது ஏராளமான மதுபானக்கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் உழவர்கரை பகுதியில் தேவாலயங்கள், கோவில்கள், பள்ளிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மதுபான கடையை திறக்க அனுமதி கொடுத்து மதுபான கடையும் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும் எனக் கோரி உழவர்கரை மதுபான கடை எதிர்ப்பு போராட்டம் குழு ஒன்றை உருவாக்கி மது கடை அருகே கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு. வருகின்றனர்.

இதுவரை அரசு செவிசாய்க்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தங்களது உழவர்கரை பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும், தெருக்களிலும் கருப்புகொடி ஏற்றி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துகொண்டு பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

மதுக்கடையை மூட கோரி பொதுமக்களும், உழவர்களை போராட்டகுழுவினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.