வரலாறு காணாத கனமழையால் தென் மாவட்டங்கள் மிகப்பெரிய துயரத்துக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் நிலைக்குலைந்து போயிருக்கின்றன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் ஆயிரக்கணக்கானோரை மீட்பதில் சிரமம் நீடித்து வருகிறது.
அந்தந்த மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உரிய நிவாரணத்தை வழங்கி வருகிறது. இந்நிலையில், அடிப்படை வசதிகள் நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி தூத்துக்குடி பி.என்.டி காலனி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ஆகியோரின் காரை முற்றுகையிட்டனர். இதையடுத்து அமைச்சர்கள் கீதா ஜீவன் மற்றும் கே என் நேரு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.