`மிக்ஜம்’ புயல் காரணமாக பெய்த மழையால் சென்னையில் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் அங்கு மின்தடை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து பெரம்பூர் ஜமாலியா பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது பகுதிக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் தண்ணீரை வெளியேற்ற தேவையான வசதிகளை செய்துதர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய மேயர் பிரியா, உங்கள் பகுதிக்கு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை திரும்ப பெற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.