பஞ்சாப் மாநிலம் டார்ன் டரான் மாவட்டத்தில் உள்ள கலாஷ் கிராமத்தில், எல்லை பாதுகாப்பு படையினர், நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, காலை 10 மணி அளவில், அருகில் இருந்த விவசாய நிலத்தில், அசைவு ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்டு சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்கள், அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, 416 கிராம் எடை உள்ள போதைப் பொருள், ட்ரோன் ஒன்றுடன் கிடந்துள்ளது.
இதனை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர், அந்த ட்ரோன் குறித்து ஆராயந்துள்ளனர். அந்த ஆராய்வின் முடிவில், இது DJI Mavic 3 classic என்ற சீனாவில் உருவாக்கப்பட்ட ட்ரோன் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தற்போது பேசியுள்ள எல்லை பாதுகாப்பு படை, “பாதுகாப்பு படை வீரர்களின் தீவிரமான கண்காணிப்பின் மூலமாக, மீண்டும் ஒரு முறை, போதைப் பொருட்கள் மற்றும் ட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் எல்லைகளில் இருந்து நாட்டுக்குள் போதைப் பொருட்களை கடத்துவதற்காக, இந்த வகையிலான முயற்சிகள் நடத்தப்பட்டது” என்று கூறினர்.