சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி, மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக அடிக்கடி சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த பகுதிகளில் அதிக அளவில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால் அதனை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில் புதிய முயற்சியாக போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனி என்பவர் அடிக்கடி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படும் பகுதிகளில் பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம்பழத்தைக் கொண்டு திருஷ்டி சுற்றி போட்டனர். இதனை கண்ட வாகன ஓட்டிகள் ஆச்சரியம் அடைந்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

சாலைகளில் பூசணிக்காய் உடைக்க கூடாது என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில் போலீசாரே சாலையின் ஓரத்தில் பூசணிக்காய் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து செய்திகள் வெளியானதை தொடர்ந்து மதுரவாயல் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனியை காவல் கட்டுப்பாடு அறைக்கு மாற்றம் செய்து போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் உத்தரவிட்டார்.
விபத்துக்களை தடுக்க நூதனம் முயற்சியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் பாராட்டு கிடைக்கும் என எண்ணிய தருவாயில் கிடைத்ததோ பணியிட மாற்றம்.