பி.வி.சிந்து ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடரில் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஜாங் யி மானை எதிர்த்து விளையாடினார். 32 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 2-21, 13-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார். இந்த சீசனில் சிந்து முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறுவது இது 7-வது முறையாகும்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ், ராங்கி ரெட்டி ஜோடி 21-16, 11-21, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் லியோ ரோலி கார்னாண்டோ, டேனியல் மார்ட்டின் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் 21-15, 12-21, 24-22 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த பிரியன்ஷு ரஜாவத்தை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார். மற்றொரு இந்திய வீரரான மிதுன் மஞ்சுநாத் 21-13, 22-24, 18-21 என்ற செட் கணக்கில் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் போராடி சீனாவின் வெங் ஹாங் யங்கிடம் தோல்வி அடைந்தார்.