மக்களவையில் பேசிய சில கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கியதை மீண்டும் சேர்க்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எனது உரையின் குறிப்பிட்ட பகுதியை நீங்கள் நீக்கி இருக்கிறீர்கள். அவை நடைமுறைப்படி அவ்வாறு நீக்குவதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், மக்களவை நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 380 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்ட உரைகளை மட்டும்தான் நீக்க முடியும்.
ஆனால், எனது உரையின் கணிசமான பகுதிகளை, இந்த விதியின் கீழ் நீக்கியிருப்பது கண்டு அதிர்ச்சியடைகிறேன். எனது கருத்துக்களை பதிவுகளிலிருந்து நீக்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கோட்பாடுகளுக்கு எதிரானது.
முழுமையற்ற விவாதத்தில் தொடர்புடைய பகுதிகளை மக்களவையில் இன்று (ஜூலை 2) இணைக்கிறேன். எனது உரையின் நீக்கப்பட்ட பகுதிகள் விதி 380ன் வரம்பிற்குள் வராது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பின் 105(1) வது பிரிவின்படி, மக்களின் கூட்டுக் குரலை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தும் அதிகாரம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் உண்டு.
அந்த உரிமையையும், நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் வகையில், நேற்று நான் செயல்பட்டேன். நான் கருதிய கருத்துக்களை பதிவுகளில் இருந்து நீக்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது.
குற்றச்சாட்டுகள் நிறைந்த (பாஜக உறுப்பினர்) அனுராக் தாக்கூரின் பேச்சில், ஆச்சரியப்படும் விதமாக ஒரே ஒரு வார்த்தை மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. உரைகளை அவை குறிப்பில் இருந்து நீக்கும் விவகாரத்தில் நீங்கள் எடுத்த முடிவு ஏற்கும்படியானது அல்ல என்பதை உரிய மரியாதையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எனவே, நீக்கப்பட்ட எனது உரையின் பகுதிகளை மீண்டும் அவைக் குறிப்பில் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.