அவசரமாக தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் ஏன்? ராகுல் காந்தி கேள்வி!

இந்தியாவில் ஒரு தலைமை தேர்தல் ஆணையரும், இரண்டு தேர்தல் ஆணையர்களும் இருப்பார்கள். தலைமை தேர்தல் ஆணையர் ஓய்வு பெறும்போது, 2 தேர்தல் ஆணையர்களில், அதிக அனுபவம் கொண்டவர், தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்பார். இந்த முறையை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, மத்திய அமைச்சர், எதிர்கட்சி தலைவர் ஆகியோரை கொண்ட குழு, தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது உள்ள மத்திய அரசு, உச்சநீதிமன்ற நீதிபதியை மட்டும் தவிர்த்துவிட்டு, தலைமை தேர்தல் ஆணையர் தேர்வுக்குழுவை உருவாக்கியுள்ளது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து, மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, தற்போது உள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் இன்று முடிந்துவிட்டதால், நேற்று புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை, மத்திய அரசு அறிவித்தது. மேலும், தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த செயலை, காங்கிரஸ் கட்சியினர் கண்டித்து வருகின்றனர். இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தேர்தல் ஆணையர் தொடர்பான வழக்கு 48 மணி நேரத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், அவசரமாக நியமனம் செய்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அம்பேத்கர் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் கொள்கைகளை நிலைநிறுத்துவதும், அரசாங்கத்தை பொறுப்பேற்க வைப்பதும் எனது கடமை என்றும் அந்த பதிவில், அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் இந்த செயல், அவமரியாதைக்கு உரியது என்றும், மரியாதையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News