ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த ஒன்றிய அரசின் முடிவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறுகையில், “காஷ்மீர் பிரச்னைக்கு முன்னாள் பிரதமர் நேருவின் தவறுகளே காரணம். பாகிஸ்தானுடன் போர் நிறுத்தம் இல்லை என்று அவர் கூறியிருந்தால், இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற ஒன்று இருந்திருக்காது” என அவர் பேசியிருந்தார்.
அமித் ஷா குற்றச் சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அளித்த பேட்டியில், ‘முன்னாள் பிரதமர் நேரு, இந்தியாவுக்குப் புது வாழ்வைக் கொடுத்தார். அவர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அமித் ஷாக்கு வரலாறு பற்றி எதுவும் தெரியாது. வரலாற்றை மாற்றி எழுதும் பழக்கம் அமித் ஷாவுக்கு உள்ளது. உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்’ என்று கூறியுள்ளார்.