மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில்லிகுரி பகுதியில், பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கிருந்தோரிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர், அது நம்முடையதாக ( இந்தியாவுனுடையதாக ) இருந்தது.. இருக்கிறது..
இருக்கும். நம்முடைய நாடு வளர்ச்சி அடைந்து வருதல் மற்றும் அதன் பொருளாதாரம் உயர்வடைவதால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் தாங்களாகவே இணைந்துவிடுவார்கள்..” என்று கூறியுள்ளார்.
மேலும், இந்தியா தற்போது பாதுகாப்புத்துறையில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும், பாதுகாப்பு ஆயுதங்களை இறக்குமதி செய்துக் கொண்டதில் இருந்து, தற்போது ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா வளர்ந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், யாராலும் தோற்கடிக்க முடியாத நிலையை இந்தியா தற்போது அடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் குறித்து பேசும்போது, “பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொடுத்து வருகிறது.
இருந்த போதிலும், பல ஆண்டுகளாக இஸ்லாமபாத்தால் ( பாகிஸ்தானின் தலைநகரம் ) புறக்கணிக்கப்பட்டு வருவதை, கனிம வளங்கள் நிறைந்த அப்பகுதி மக்கள் பார்த்து வருகின்றனர்.
மின்சார கட்டணத்தின் மீது அதிக வரி, கோதுமை பற்றாக்குறை, மானியங்களை ரத்து செய்தல் போன்ற பல்வேறு விஷயங்களுக்காக, உள்ளூர் பொதுமக்கள் பல்வேறு முறை, வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்” என்றும் கூறியுள்ளார்.
தனது உரையின் இறுதியில், “இந்தியா மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாது. ஆனால், நாங்கள் தலையிட்டால்.., என்ன ஆகும் என்று நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான நாட்டின் வளர்ச்சி குறித்து, பாஜகவின் தலைவர்கள் பல்வேறு முறை பேசி வருகின்றனர்.
மேலும், பாகிஸ்தான் நாட்டால் வளர்த்துவிடப்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாஜக அரசு எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்கள் பாராட்டுவதாகவும், அவர்கள் தொடர்ச்சியாக தங்களது பிரச்சாரத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.