யோகா குரு ராம்தேவ் மற்றும் அவரது உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் இணைந்து, பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் விளம்பரங்கள், நவீன மருத்துவத்திற்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, விளம்பரங்களை நீக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை, பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு செவி கொடுக்காத பதஞ்சலி நிறுவனம், தொடர்ச்சியாக விளம்பரங்களை வெளியிட்டு வந்தது.
இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, அது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஹீமா கோலி மற்றும் அசாநுதீன் அமானுல்லா ஆகியோர் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.
அப்போது, உங்களது மருந்துகளுக்கு, ஒரு பக்க அளவில் விளம்பரம் கொடுப்பது போல், இந்த மன்னிப்பு செய்திக் குறிப்பும், ஒரு பக்க அளவில் கொடுக்கப்படுமா என்று நீதிபதி கேட்டார்.
இதற்கு, தவறான விளம்பரம் தொடர்பான தங்களது மன்னிப்பை, இதுவரை, 67 செய்தித்தாள்களில் வெளியிட்டிருக்கிறோம். இன்னும் வேண்டும் என்றாலும், சில பத்திரிகைகளில் வெளியிட தயாராக உள்ளோம் என்று, ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும், இந்த விளம்பரங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இந்த விசாரணையின் இறுதியில், தற்போது பதஞ்சலி நிறுவனம், பிரபல பத்திரிகை ஒன்றில், மன்னிப்பு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அல்லது வழிகாட்டுதலின்படி, பதஞ்சலி நிறுவனத்தின் சார்பில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுமாதிரியான தவறு இனிமேல் திரும்ப நடக்காது என்றும் அவர்கள் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.