இந்தியாவின் பணம் சம்பந்தமான விஷயங்களை கையாண்டு வருவது ரிசர்வ் வங்கி. இந்த வங்கி தான், இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறது. மேலும், அந்த வங்கிகளுக்கு தேவையான தொகையை கடனாக வழங்கி வருகிறது.
இந்த வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம், கடந்த 5 ஆண்டுகளாக குறைக்கப்படாமலே இருந்து வந்தது. இந்நிலையில், ஆர்.பி.ஐ-யின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி குறைக்கப்பட்டால், வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியும் குறைக்கப்படும். எனவே, இந்த தகவல், பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.