மணிப்பூரில் இப்போது கூட கலவரம் ஓயவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார்.
கார்கே தலைமையில் முதன்முறையாக கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஓட்டலில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் இந்த செயற்குழு கூட்டம் நடை பெறவுள்ளது.
இதில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
மணிப்பூர் மாநில கலவரங்களை தடுக்கவும், மீண்டும் அமைதியை நிலை நாட்டவும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தவறி விட்டது. மணிப்பூரில் இப்போது கூட கலவரம் ஓயவில்லை. மணிப்பூர் கலவரங்களை நாடு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
5 டிரில்லியன் பொருளாதாரம், பாரத், புதிய இந்தியா, அம்ருத்கால், இந்தியா உலகிலேயே 3-வதுமிகப்பெரிய வணிக நாடு எனும் பிம்பங்கள் எல்லாம் வெறும் நாடகத்தனமான பேச்சுகள். நாட்டின் சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும், பின்தங்கிய வர்க்கத்தினரின் அடிப்படை உரிமைக்கும் காங்கிரஸ் எப்போதுமே கட்டுப்பட்டு உள்ளது.
நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்கள் குரலே காங்கிரஸின் குரலாக ஒலிக்கும். இன்று நாட்டின் எதிர்கால நலனுக்காக 27 கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே கோட்டில் பயணிக்கின்றன.வரப்போகும் 5 மாநில சட்டப் பேரவை, மக்களவைத் தேர்தல்கள் குறித்து நாளை (இன்று) விரிவாக விவாதிக்கவுள்ளோம். இவ்வாறு கார்கே பேசினார்.