தமிழக முதல்வர் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் – ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சாலை மறியல்

தமிழ்நாடு ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் 86 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்சப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் நல அமைப்பு சார்பில் மதுரை அரசு போக்குவரத்துக்கழக கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

நாங்கள் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் உங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை கண்டிப்பாக தருவோம் என்று தேர்தலில் வாக்குறுதியை தந்துவிட்டு தற்போது 600 நாட்கள் கழிந்தும், எங்களுக்கு இது வரை எந்த தொகையும் தரவில்லை, எங்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் துரோகம் செய்து விட்டார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு கடந்த 86 மாதங்களாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்சப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் விருப்ப ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், மாதந்தோறும் 1-ந் தேதி ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தமிழக அரசால் நீதிமன்றத்தில் வாங்கப்பட்ட தடையை உடனே நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த சாலை மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட விருதுநகர், தேனி, திருநெல்வேலி சேர்ந்த ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த சாலைமறியல் போராட்டத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல்துறையினர் போக்குவரத்துக்கழக அலுவலகம் பகுதியில் வாகன போக்குவரத்தை நிறுத்தி மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்‌. இதனால் சுமார் 4 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.